வாழ்வியல் சிந்தனைகள்
கனடா வாழ் இலங்கைத் தமிழரின் எண்ணங்கள்
Description:... வளமான சிந்தனைகள்!
முகநூலில் கிடைத்த நண்பர்களில் கனடா வாழ் இலங்கைத் தமிழரான ராதா மனோகர் வித்தியாசமானவர். இலங்கைத் தமிழராக இருந்தாலும், திராவிட இயக்கத்தின்மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.
எனக்கு அவரைப் பிடிக்க இது ஒன்றே போதுமே. தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தையும், அறிவின் தரத்தையும் உயர்த்தியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை உணர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.
அந்த வகையில், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் கும்பலுக்கு எதிராக முகநூலில் வாதங்களை எடுத்து வைக்கும் ராதா மனோகரையும் எனக்குப் பிடித்தது.
அவருடைய எழுத்துக்களின் ஆழம், பார்வையின் விசாலமும் என்னை அவர்பால் ஈர்த்தது. அவருடன் பேசும்போது, அவருடைய எழுத்துக்களை அறிமுகம் செய்தார். பிளாக்குகளில் அவர் பதிவு செய்திருந்து கட்டுரைகள் வித்தியாசமான கோணங்களில் எழுதப்பட்டிருந்தன.
அவற்றில் வாழ்வியல் தொடர்பான கட்டுரைகளை எனது உதயமுகம் இணையதளத்தில் (www.uthayamugam.com) தொடர்ந்து வெளியிட்டு, அவற்றை எனது சிபி பதிப்பகத்தின் வெளியீடாக கொண்டுவர முடிவு செய்தேன்.
இதற்கு நண்பர் ராதா மனோகர் ஒப்புதல் அளித்தார். அவருடைய பிற எழுத்துகளையும் வேறு வேறு தலைப்புகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.
இலங்கையில் திராவிட இயக்கம் பெற்றிருந்த எழுச்சியையும், இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்த உண்மையான விவரங்களையும் பற்றிய ராதா மனோகரின் பார்வை, தாய்த்தமிழ்நாட்டிற்கு புதிய உண்மைகளை வெளிப்படுத்தும். இந்த நூலைத் தொடர்ந்து அவருடைய வரலாற்று நாவல் ஒன்றையும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பகுதியான கட்டுரைகள் நமது வாழ்க்கையின் உண்மையான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகின்றன. படிக்கத்தொடங்கினால் உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
ஆதனூர் சோழன்
Show description