கே.எஸ். கருணா பிரசாத் 1980-¬ களில் நாடகவியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு, கூத்துப்பட்டறையில் சேர்ந்து தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார்.
அங்கே அவர் மேற்கொண்ட உடல்+மனம்+குரல் வள பயிற்சிகள் கடுமையானவை. சிலம்பம், யோகா, கலரி, தஞ்சாவூர் குத்து வரிசை என உடல் மொழிக்கான பயிற்சியும் விடாமல் அரங்கேறியிருக்கிறது. ஆர்வம் வழிநடத்திச் செல்ல விரும்பி பயணித்து லெகுவாய் அந்த தயார்படுத்துதலில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அங்கே தான் அவருக்கான சமக, அரசியல் சார்ந்த பார்வைகள் விசாலம் கொள்ளத் துவங்கின. அறிவியல் சார்ந்த, கலையம்சம் கூடிய படைப்களின் தரிசனம் கிடைத்து, அவரை செழுமை கொள்ள வைக்கிறது.
பின் பத்துக்கும் மேற்பட்ட நவீன நாடகங்களை உருவாக்கி, இயக்கியிருக்கிறார். மூன்றாம் அரங்கு இவரது நாடக குழுவின் பெயர். இது ஒரு காரணப் பெயர். இப்படி அல்லது அப்படி என்பதை தாண்டி மூன்றாவதான மாற்று சிந்தனைக்கான, இரண்டிற்கும் நடுவயமான வகைமையை சார்ந்த நாடகம் என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். வளரக் காத்திருக்கும் மூன்றாம் உலக நாடுகளின் குரல் உலக அரங்கில் கேட்கும் விதத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற விதமாக, அதன் மனிதாபிமான, மனிதவுரிமை தவிப்பின் மானசீக படிமமாக இயங்குகிற நாடகங்களின் ஊற்றுவாய் என்றும் கொள்ளலாம்.
கருணா பிரசாத்தின் நடிப்பில் வெளிவந்த முதல் நாடகம் கூத்துப்பட்டறை ந.முத்துசாமியின் நாடகமான சுவரொட்டிகள். அது கட்-அவ்ட் கலாச்சார பின்புலத்தில் உள்ள அரசியலை அங்கத தன்மையோடு வெளிப்படுத்தியது.
அடுத்ததாய் இவர் நடித்த நாடகம் முற்றுகை. பின்னர் சத்யலீலா என்கிற பெயரில் இந்த நாடகத்தை இவரே இயக்கவும் செய்திருக்கிறார். இந்த நாடகம் மதம், சாமியார்கள் கையாளும் அரசியல் சூழ்ச்சியை நையாண்டி செய்யும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து எம்ஜிஆர் மறைவை ஒட்டி நடந்த விசயங்களின் பின்புலத்தில் இயங்குகிற ‘நற்றுணையப்பன்’ என்கிற நாடகத்தில் நடித்திருக்கிறார். சிக்ஃபிரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’ நாடகம், ஹிட்லருக்கிருந்த யூதர்கள் மீதான வெறுப்பை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்டது. அதிலும் நடித்திருக்கிறார்.
இவரது நாடகங்கள் பூடகத்தனத்தோடும், பாவங்களின் மூலமும், காட்சி படிமங்களின் மூலமும் உணர்த்துகிற விதத்தில், பல வகையான உத்திகளை உள்வாங்கியபடி செறிவு கொள்கின்றன. மௌனத்தையும், இருளையும் காட்சிப் படிமங்களாக கட்டமைக்கிற உத்தி இவரது ஆக்கத்தில் தென்படும் பிரத்யேக பாணி.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் அவளுக்கு வெயில் என்று பெயர், மஞ்சனத்தி, எட்டு ரூபா செப்புக் குடம் போன்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டின் போது, அந்தந்த தொகுப்பின் சாரமான கவிதைகளை தெரிந்தெடுத்து, தன் நுட்பமான நவீன நாடக கூறுகளோடு, நிகழ்த்து கலையாக படைத்திருக்கிறார்.
இவரின் நடிப்பாற்றல் புருவம் உயர்த்த வைக்கக் கூடியது. குறிப்பாக அவரின் ஓரங்க நாடகங்களில் அவரின் நவரச பாவங்கள் ஆச்சர்யப்பட வைப்பவை. இந்த இடத்தில் இவான் துர்கனேவ் சிறுகதையை தழுவி, இவர் நடித்து, செழியன் ஒளிப்பதிவு செய்த நிழல்கள் குறும்படத்தில் இவர் வெளிப்படுத்திய தேர்ந்த நடிப்பு தன்னிச்சையாய் நினைவு வளையத்திற்குள் வந்து வட்டமடிக்கிறது. அத்தனை அற்புதமான உடல் மொழி, திரைமொழிக்கேற்ற மௌன மொழியான அசாத்திய முகபாவம் துளி வசனமில்லாமல் கதையோட்டத்தை வீரியமாய் வெளிப்படுத்திச் செல்லும் பாங்கு, நடிப்புலகில் இவருக்கு ஓர் உன்னத இடம் காத்திருக்கிறது என்பதற்கான கட்டியம் கூறுபவை.
குறிப்பாக, அவரின் நான்காம் ஆசிரமம், கர்ணன், அரவான் போன்ற நவீன ஓரங்க நாடகங்கள் வரிசையில் அவர் இன்னும் பலபல சரித்திர, இதிகாச, சமூக கதாபாத்திரங்களில் குறிப்பாக பீஷ்மர், துரியோதனன், வாலி, விபீஷ்ணன், சரயு, குகன், பரதன் போன்ற பலப்பல ஆளுமைகளை நிகழ், எதிர்கால வித்யாசமான நீட்சியாய், அவரின் பிரத்யேக மாற்றுப் பார்வையுடன் கையாண்டு, தொடர்ந்து நவீன நாடகவுலகை பரவசத்தில் ஆழ்த்த வேண்டுமென்பது எனது வேண்டுகோள்.
அவரின் நாடகங்கள் மூலம், பார்த்து பரவசித்த கருணா பிரசாத் என்கிற நடிகரின் ஆளுமையை, படைப்பாற்றலை கொஞ்சமாய் இந்த கட்டுரைகளில் கிள்ளிப் போட்டிருக்கிறேன்.
சுயத்தை எந்த சூழ்நிலையிலும் இழக்காத, எதையும் எவரிடமும் எதிர்பார்க்காத, இயல்பான, வெளிப்படையான, வெள்ளந்தியான, வீரியமான, விசாலமான, அதிதீவிர சமூக அக்கறையாளராக, நவீன நாடக நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக ஆழ்ந்து, உயர்ந்து, விரிந்து செல்லும் அவரின் வீரியம். உலக கலைத் திருவிழாவிற்கு இதம் தரும் பிரபஞ்ச குடை என்கிற குறியீடாய் காலத்தை கடந்து நிற்கும் என்பது ஆன்மாவின் சொக்கமான வாக்கு.
வாழ்த்துகளுடன், தி. குலசேகர்